இருபத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம்!விபரங்கள் இணைப்பு!

இருபத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம்!விபரங்கள் இணைப்பு!

இந்திய பிரதமர் நரேந்திரமோடி மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக அடுத்தவாரம் மார்ச் மாதம் 13 ஆம் தேதி இலங்கைக்கு செல்லும்போது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாருக்கும் செல்வார் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

150219125916_modi_with_maithri_624x351_bbc_nocredit

மோடியின் இலங்கை பயணத்தின்போது அவர் செல்லும் இடங்கள் தொடர்பான பயணத்திட்டத்தை இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது. அதன்படி, இலங்கைத் தலைநகர் கொழும்பு தவிர அநுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாருக்கும் மோடி செல்வார் என்று கூறப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் மோடி மஹாபோதி புனிதத்தலத்துக்கு செல்வார் என்றும், யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்படவிருக்கும் யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுவார் என்றும் இந்திய உதவியுடன் கட்டப்பட்டிருக்கும் வீடுகளை அதற்குரிய பயனாளிகளுக்கு அவர் கையளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரில், தலைமன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையிலான ரயில்சேவை மீண்டும் துவங்குவதை குறிப்புணர்த்தும் விதமாக அங்கிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் முதல் ரயிலுக்கு கொடியசைத்து மோடி துவக்கிவைப்பார் என்றும் இலங்கை அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்திருக்கிறது.

இந்திய நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த இரயில்பாதை புனரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக நாட்டின் வடக்குக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவை மீண்டும் செயற்படத்துவங்கும் என்றும் இலங்கை அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுடனும் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜாங்கப் பேச்சுவார்த்தைகளை மோடி நடத்துவார் என்றும், இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் அவர் பேசுவார் என்றும், இலங்கையில் இருக்கும் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை ராணுவத்தினரில் அங்கே கொல்லப்பட்டவருக்கான நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைப்பார் என்றும், மஹாபோதிக்கு செல்வார் என்றும் இலங்கை அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரிபால சிறிசேன, தனது முதலாவது வெளிநாட்டுப்பயணமாக பிப்ரவரி மாதம் இந்தியா சென்றிருந்தார். அவரது நான்குநாள் இந்தியப் பயணத்தின்போது அவர் இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து உரையாடியிருந்தார்.

இந்தியா இலங்கைக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்களும் அப்போது கையெழுத்திடப்பட்டன. மேலும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை இலங்கைக்கு வரும்படி மைத்ரிபால சிறிசேன அப்போது நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக இந்திய தரப்பிலும் அப்போதே தெரிவிக்கப்பட்டிருந்த பின்னணியில் மோடியின் இலங்கை பயணத்திட்ட விவரங்கள் இன்று இலங்கை அரசால் முறைப்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தனது இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச்.15 ஆம் தேதி மோடி இந்தியா திரும்புவார் என்றும் இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருபத்தி ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக செல்லவிருக்கிறார். 1987 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு அரசுமுறைப்பயணமாக சென்று அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவுடன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த பயணத்தின் முடிவில் அவர் இலங்கை ராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு மட்டுமான அரசுமுறைப் பயணமாகச் செல்வது இதுவே முதல்முறை. ராஜீவ் காந்திக்குப் பிறகான காலகட்டத்தில் இந்தியப்பிரதமர்கள் சிலர் இலங்கைக்கு சென்றிருந்தாலும் இலங்கைக்கான தனிப்பட்ட அரசுமுறைப்பயணமாக அவை அமைந்திருக்கவில்லை. மாறாக, இலங்கையில் நடந்த சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான பயணங்களாகவே அவை அமைந்திருந்தன.

2008 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்போதைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கையளித்தார். அதேசமயம், 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவில்லை.

நன்றி-பிபிசி இணையம்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux