கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா சனி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதலாம் திகதி வரை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 7689 பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மீனவ மக்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய, கடலுக்கு அதிபதியாக விளங்கும் புனித அந்தோனியார் தேவாலயம் என கிறிஸ்தவர்களினால் போற்றப்படுகின்ற கச்சதீவுக்கு இம்முறை தமிழகத்திலிருந்து 112 வள்ளங்களில் 3945 பேரும் இலங்கையிலிருந்து 265 வள்ளங்களில் 3744 பேரும் கச்சதீவுக்கு வருகை தந்திருந்தனர். இம்முறையே அதிகூடிய பக்தர்கள் கலந்து கொண்டதாக இலங்கை கடற்படை மற்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை 28ம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகியதுடன் மாலை சிலுவை பாதையும் இடம் பெற்றது. இத்துடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றதுடன் கொடி இறக்கமும் இடம்பெற்றது. இலங்கை சார்பில் யாழ். குரு முதல்வர் ஜஸ்டின் ஞானப் பிரகாசம்அவர்களும்-நெடுந்தீவு பங்குத் தந்தையும் இந்தியாவின் சார்பில் பாலயங்கோட்டை அருட்தந்தை ஜோ மிக்ஸ் மற்றும் இராமேஸ்வரம் பங்குத் தந்தை அருட் திரு சகாயராஜ் அடிகளாரும் திருப்பலி பூஜையை நடத்தினர். யாழ். மாவட்ட பேராயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகையின் வழிகாட்டலில் இலங்கை கடற்படையினரின் பூரண ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வருடாந்த திருவிழாவில் கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் ரவி விஜேகுணவர்தன, வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சரத் திஸாநாயக்க, இந்திய துணைத் தூதுவர் வை.கே. நடராஜ், முன்னாள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
காங்கேசன்துறையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் (70 கிலோ மீற்றர்) இந்து சமுத்திரத்தில் சுமார் 285 ஏக்கர் பரப்பளவை கொண்ட கச்சதீவு, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க 1974ம் ஆண்டு இந்திரா காந்தியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு சொந்தமாகியது.
சர்வதேச கடல் எல்லையிலிருந்து 1.8 கிலோ மீற்றர் தொலைவில் இந்தத் தீவு அமைந்துள்ளதுடன் யாழ். மாவட்ட நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்படுகிறது.
தமிழகத்திலிருந்து வரும் அடியார்கள் ஆலய வழிபாட்டிற்கு கடலில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்ததால் கடற்படையினரின் உயிர் காப்பு பிரிவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் சுமார் 8 ஆயிரம் அடியார்களின் பாதுகாப்புக்காக பெருந்தொகையான படையினரும் பொலிஸாரும் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குடிநீர் வசதிகள், மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் புடைவை மற்றும் பல்பொருள் வியாபாரிகளும் வருகை தந்திருந்ததனால் 24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டது.
இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்து பல மணிநேர கடல்வழி பயணத்தை மேற்கொண்டு கச்சதீவுக்கு வருகை தந்த பக்தர்களை இலங்கை கடற்படையினர் வரவேற்றதுடன் மூன்று வேளை உணவு கடற்படையினரால் இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இராமேஸ்வரம், திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 130 இற்கும் அதிகமான அருட் சகோதரிகளும் அருட் தந்தைகளும் இலங்கையிலிருந்து 30 ற்கும் அதிகமானோர் வருகை தந்திருந்தனர். இவர்கள் தங்குவதற்கு தனித்தனியான தற்காலிக கொட்டில்கள் வழங்கப்பட்டிருந்தன.
இம்முறை வழக்கத்திற்கு மாற்றமாக இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதாக கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் இந்திக சில்வா தெரிவித்தார்.
இலங்கை அரசு மற்றும் இலங்கை கடற்படையினரின் திருவிழா மற்றும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் விசேட பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
இதேவேளை, திருவிழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த தமிழ் நாட்டு பெண் ஒருவரின் ஏழு பவுண் பெறுமதியான தாலிக் கொடி திருடப்பட்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. இது தொடர்பில் கச்சதீவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.