மகா சிவராத்திரி-சிறப்புக்கட்டுரை இணைப்பு!

மகா சிவராத்திரி-சிறப்புக்கட்டுரை இணைப்பு!

இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிப்புராணங்கள் கூறுகின்றன. பக்தர்கள் மனமுருகி இறைவனை வேண்டித் தங்களை துயரமிக்க சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும்படி வேண்டுகிறார்கள்.

mainpic_L

அவ்வாறு வேண்டுகின்ற அவ்வேளையில் இறைவன் மனமிரங்கி பிட்டுக்கு மண் சுமந்ததாகவும் தாய்ப்பன்றியை இழந்த பன்றிக் குட்டிகளுக்கு தாயாக வந்து பாலூட்டியதாகவும் புராணக் கதைகள் கூறுகின்றன.

எப்போது அதர்மம் அரசாட்சி செய்து தர்மம் அழுகின்றதோ அப்போது தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை அழிப்பதற்கு நான் அவதாரம் செய்கின்றேன் என பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது.

சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்தொழில்களைப் புரிவதாகவும் அறிந்துள்ளோம். இவ்வாறு இறைவன் எம்மைப் படைத்து எம்மில் இருக்கும் தீய குணங்களை அழித்து எமக்கு அருள் புரிந்து வாழ்வாங்கு வாழவைக்கின்றார்.

அதர்மம் இருள் சூழ்ந்து மக்கள் இன்னலில் இருக்கின்றபோது அவர்களைக் காப்பாற்ற இறைவன் மீண்டும் அவதாரம் எடுப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள். உலகில் இவ்வாறு குழப்பம் மிகுந்த சூழ்நிலையே இருள் என்று கூறலாம்.

இதை அறியாமை எனக்கூடக் கூறலாம். கர்ம வினைகளினால் சிக்குண்டு தவிக்கின்ற எம்மைக் காத்துக் காப்பாற்றுகின்ற தகுதி அவருக்கே உள்ளது. இவ்வாறு காப்பாற்றுகின்ற இறைவன் சிவன் எனப் பெயர் பெறக் காரணம் என்ன?

சிவன் என்றால் கவிதை வடிவமானவர் என்றும் மங்களகரமானவர் என்றும் நன்மை பயப்பவர் என்றும் கூறலாம். இவ்வாறு ஜோதி வடிவமாக இருந்தவாறு ஆத்மாக்களாகிய அனைவரையும் காப்பாற்றுகின்றார். நாம் பிறவிகள் தோறும் செய்த பாவங்களை அழிப்பது மட்டுமல்ல நாம் புண்ணியங்களைச் செய்து எமது வருங்காலப் பிறவிகளுக்குச் சேர்ப்பதற்கும் உதவி செய்கிறார்.

சிவராத்திரி பரம்பரை பரம்பரையாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற ஒரு சடங்காகவே உள்ளது. ஆன்மிகம் மறைந்து விடக்கூடாது என்பதற்காகவே குறித்த காலங்களில் உற்சவங்கள் வருகின்றன.

பாரத தேசத்தில் சிவ பகவானின் ஞாபகார்த்தமாக ஆயிரக்கணக்கில் கோயில்கள் உள்ளன. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படாத கோயில்களே இல்லை என்னும் அளவிற்கு சிவனுடைய நாமம் பிரசித்தமாக உள்ளது.

பாரத தேசத்தின் ஒவ்வொரு நகரம் அல்லது கிராமத்திலும் கூட ஜோதி பிந்துவான பரமாத்மாவின் ஞாபகார்த்தமாக சிவலிங்கம் உள்ளது. வெவ்வேறு பெயர்களில் ஆராதனைகளும் நடந்துகொண்டிருப்பதை நாம் அறிவோம். உதாரணமாக இவை அமர்நாத், விஷ்வநாத், சோமநாத், பபூல்நாத், பசுபதிநாத் என்று அழைக்கப்படுகின்றன.

இது தவிர வெளிநாடுகளிலும் கூட விதவிதமான பெயர்களில் சிவலிங்கத்திற்கு ஆராதனைகள் நடந்து வருவதாகவும் அறிகின்றோம்.

இராத்திரி என்ற வார்த்தை தினமும் வந்து போய் கொண்டிருக்கின்ற இரவைக் குறிப்பதல்ல. மாசி மாதம் கடைசி இரவு நேரம். இந்தக் கடும் இரவு காலத்தில் தான் சிவராத்திரி தினம் வருகிறது. இக்காலத்தில் சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் காரணம் அஞ்ஞான இருள் முழுமையாகவே சூழ்ந்திருப்பதைக் குறிப்பதாகும்.

எப்போது சிருஷ்டியில் காமம், கோபம் ஆகிய அஞ்ஞான இருள் காரணத்தால் மனித வர்க்கம் முழுவதுமே துக்கம் அசாந்தியால் துன்பப்படுகின்றதோ அப்போது தர்மம் அதர்மமாகி ஒழுங்கீனம் எங்கும் தலைவிரித்தாடும். ஆந்த சூழ்நிலையிலே தான் ஞானசூரியனாகிய சிவபரமாத்மா அஞ்ஞான இருள் அகற்றுவதற்காக அவதாரம் செய்து ஞானம் என்னும் ஒளிக்கிரணங்களால் அஞ்ஞானமாகிய இருள் பகலாக மாறிவிடுகிறது.

கலியுக துக்கமான உலகை மாற்றி சாத்யுக சுகமான உலகை ஸ்தாபனை செய்வது எல்லாம் வல்ல பரமபிதா சிவபரமாத்வாவினுடைய கடமையாகும்.

பரமாத்மாவாகிய சிவன் ஒளிப்புள்ளியாக விளங்குபவர். இதன் காரணமாக பக்தர்கள் பெரிய வடிவில் சிவலிங்கம் தயாரித்திருக்கிறார்கள், சிவலிங்கத்தின் மீது பால், தயிர், வில்வ இலை, எருக்கம் பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்கின்றார்கள். அநேக முறை ஸ்நானம் செய்து உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்கிறார்கள். விரதம் அனுஷ்டிக்கிறார்கள். இரவு கண் விழிக்கின்றார்கள். சிவராத்திரி தினம் அவ்வளவு புனிதமானது.

வில்வ இலை அர்ச்சிப்பது ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் தன்னை அர்ப்பணிப்பதாகும். இதன் உள்ளார்ந்த பொருள் பரமாத்மா அருளிய ஞானத்தின் வழி நடப்பது என்பது. எவ்வளவு து¡ரம் சிவபரமாத்மாவின் அருளுரைப்பாடி நடக்கின்றோமோ அந்தளவிற்குப் பரமாத்மாவுடனான நெருக்கமான தொடர்பை அனுபவிக்கக் கூடியதாக இருக்கும். இப்போது கலியுகம் மகாராத்திரி நேரமாக இருக்கின்றது. இந்தச் சமயத்தில் ஆத்மாவை ஞானத்தின் மூலம் விழிப்படையச் செய்வது தான் உண்மையான கண் விழிப்பாகும்.

இந்தக் கண்விழிப்பின் மூலமாகவே முக்தி கிடைக்கும். சிவபரமாத்மாவின் நினைவுச் சின்னமாகவே சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான மகிமை பொருந்திய சிவராத்திரி தினமானது ஆத்மாவில் படிந்துள்ள இருள் போன்ற தீய குணங்களை அகற்றி அவரது அருளினைப் பெறுவதைக் குறித்து நிற்கின்றது.

கலியுகத்தின் இறுதி நேரத்தில் அதர்மம் மேலோங்கும்போது தான் அவதாரம் எடுப்பதாக பகவத் கீதையில் கூறப்பட்டிருப்பது போன்ற மங்களகரமான இந்தக் காலத்தில் முழு முதற்கடவுளான சிவனை நினைத்து ஆத்மாவானது விழிப்படைய வேண்டும். இவ்வாறு ஆன்மா விழிப்படைதலே உண்மையான விழித்தல் என்று கூறமுடியும்.

ஆன்மாவை தீயகுணங்கள் பீடித்துள்ளன. அவ்வாறு பற்றியுள்ள தீயகுணங்களை சிவபரமாத்மாவினை நினைவு செய்து அந்நினைவெனும் யோகத் தீயினில் பாவங்களை இட்டு அழிக்க வேண்டும். இவ்வாறு நாம் பல பிறவிகளில் செய்த பாவ வினைகளானது அழிக்கப்படுகின்றன.

வருடம் ஒன்றிற்கு ஒருநாள் மட்டும் நாம் சிவபெருமானை நினைத்து விழித்திருந்து வணங்கினால் மட்டும் போதாது. ஏனெனில் பல பிறவிகளில் செய்த பாவத்தினை ஓரிரு நாட்களில் அழித்து முடிக்க முடியாதல்லவா? அனைத்து தெய்வீக குணங்களும் நிறைந்த சிவபெருமானை நாம் உணர்கின்ற போதும், உறங்குகின்றபோதும், நடக்கின்றபோதும் நினைக்கவேண்டும். இதனால் தானோ என்னவோ நடந்தும் இருந்தும் அவன் தாள் நினை என்று சொல்லிவைத்துள்ளார்கள்.

இறைவனை எமது தந்தையாக, தாயாக, குருவாக, ஆசிரியராக, குழந்தையாக, நண்பனாக, உற்ற வாழ்க்கைத் துணையாக, சகோதரனாக அவருடன் உறவு முறையினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் வாழ்க்கையில் இவ்வாறான உறவு முறைகளில் வாழ்ந்தே பழக்கப்பட்டுள்ளோம். அதனால் இறைவனுடன் இவ்வாறான உறவுமுறைகளை ஏற்படுத்தும்போது அவரை மிக இலகுவாக நினைக்கக்கூடியதாக இருக்கும்.

சர்வ வல்லமை பொருந்திய சிவபரமாத்மாவினை எமது அன்பென்னும் இழையினால் கட்டி வைக்கின்றபோது அவரும் எமது குடும்ப அங்கத்தவர் ஆகிவிடுவார். இத்தகைய ஓர் விழிப்புணர்வினை அஞ்ஞான இருள் அகற்றும் சிவராத்திரி தினத்தில் ஞான ஒளியினை ஏற்றுவோமாக!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux