தமிழர் மனதை வெற்றி கொள்ள அரசு விரைந்து செயற்பட வேண்டும்-ஜனாதிபதி மைத்திரியிடம் வடக்கு முதல்வர் சி.வி. எடுத்துரைப்பு: அவரும் சம்மதம் தெரிவிப்பு!

தமிழர் மனதை வெற்றி கொள்ள அரசு விரைந்து செயற்பட வேண்டும்-ஜனாதிபதி மைத்திரியிடம் வடக்கு முதல்வர் சி.வி. எடுத்துரைப்பு: அவரும் சம்மதம் தெரிவிப்பு!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களது மனங்களை வெற்றி கொள்ள வேண்டுமாயின் அதற்கு அம்மக்களின் தேவையறிந்து அரசாங்கம் துரிதமாகவும், துணிந்தும் சில விடயங்களை உடனடியாகச் செய்ய வேண்டும்.

n-1

காலந் தாழ்ந்து செல்வதானது புதிய அரசாங்கத்தின் மீதும் அம் மக்கள் தமது நம்பிக் கையீனத்தை வெளிப்படுத்தவே வழி வகுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தான் சந்தித்தபோது எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

யுத்தத்தின் போது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உணர்வின் வெளிப்பாடே தவிரவும் அது இந்தப் புதிய அரசாங்கத்திற்கு எதிரானதல்ல எனவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தித் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்த காலத்தில் அப்பாவிகளான தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் கொலைகள் தொடர்பாக ஒரு வரலாற்றுப் பதிவு ஆவணம் இருக்க வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டே இந்தப் பிரேரணை வடமாகாண சபையில் முன் வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான தனது சந்திப்புக் குறித்துச் சில ஊடகங்கள் குறிப்பாகச் சில தமிழ் இணையத்தளங்கள் மாறுபட்டதும், தமது இஷ்டத்துக்குமாக செய்திகளை திரிபுபடுத்தி வெளியிட்டிருந்தன. ஆனால் உண்மையிலேயே இச்சந்திப்பு மிகவும் சுமுகமானதாகவும், நட்பு ரீதியானதுமாக அமைந்திருந்ததாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தனது கோரிக்கைகள் அனைத்தையும் மிகவும் அவதானமாக செவிமடுத்த ஜனாதிபதி அவை யாவும் நிறைவேற்றப்படும் எனவும் தன்னிடம் கூறியதா கவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கில் அதிகரித்த இராணுவப் பிரசன்னத்தைக் குறைப்பது குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் தமிழ் மக்கள் புதிய அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இழந்துவிடுவர் என்றும் விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.

இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து ஆயிரம் ஏக்கர் காணியை விடுவித்து, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தம்மிடம் உறுதியளித்தார் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். அதற்கமையவே பலாலியில் ஆயிரம் ஏக்கர் காணி ஜனாதிபதியின் அமைச்சரவை தீர்மானத்திற்கமைய விடுவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்தும் இச்சந்திப்பில் முதலமைச்சருடன் ஆராயப்பட்டதுடன் இந்த முதற்கட்ட சந்திப்பின்போது இந்திய இலங்கை மீனவர்கள் விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதன் காரணமாக அப்பகுதி மீனவர்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர், ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் போது இருநாடுகளி னதும் கூட்டு ரோந்தின் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் என்ற யோசனையை தான் முன்வைத்தார் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux