எத்தனை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தாலும் வீதி விபத்து களும் உயிரிழப்புக்களும் குறைந்ததாகத் தெரியவில்லை. தின மும் சராசரி எட்டுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கிறார்க ளென்பது பெரும் கவலைக்குரிய விடயம்.போக்குவரத்துப் பொலிஸாரின் விழிப்பூட்டல் நடவடிக்கைகள் சிறப்பாகத் தான் இருக்கின்றன. சர்வதேச தரத்துக்கு நிகராக வீதிகள் அமைக் கப்பட்டிருப்பதோடு வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளும் பொலிஸா ரால் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்றாலும் விபத்து க்கள் குறைந்ததாகத் தெரியவில்லை.
இதற்கான அடிப்படைக் காரண ங்கள் இன்னும் கண்டறியப்பட்டு சரியான பரிகாரம் காண முடியாத நிலையே இன்னும் தொடர்கிறது.நேற்று முன்தினம் ராகமயில் நடந்த கோரவிபத்து பேரதிர்ச்சியை ஏற்ப டுத்தியிருப்பதோடு சாதாரண மக்கள் மத்தியில் அச்சத்தை உரு வாக்கியிருக்கிறது.நீர்கொழும்பிலிருந்து ராகமைக்கு அவசரமாக வந்து கொண்டிருந்த பிக்கப் ரக வாகனமொன்று வீதியைக் கடக்க முனைந்தபோது ரயில் வே கடவையில் வைத்து ரயிலில் மோதுண்டு பாரிய அனர்த்தத்தைச் சந்தித்தது. இந்த கோரச் சம்பவத்தில் பிக்கப் வாகனம் சுக்கு நூறாகியது மட்டுமல்ல அதில் பயணம் செய்த நால்வரின் உயிரையும் காவு கொண்டது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நீர்கொழும்பு சென்று விட்டு திரும்பும் போது இந்த கொடூர சம்பவம் நடத்திருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர். சம்பவத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற தந்தை அதில் பயணம் செய்த தாய், மகள், மகன் ஆகிய நால்வருமே ஸ்தலத்தில் உயிரிழந்திருக்கின்றனர். அடை யாளம் காண முடியாத அளவுக்கு அனைத்து உடல்களும் சிதறிக்கிடந்ததையே காணக்கூடியதாக இருந்தது. சம்பவத்திலே இருவர் குற்றுயிராக மீட்கப்பட்டனர். அவர்களும் பிழைப்பது கஷ்டமென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது இவர்களது உயிர்களும் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
மாத்தறையில் இருந்து வவுனியா சென்று கொண்டிருந்த ‘ரஜரட்ட ரஜினி’ கடுகதி ரயிலே இந்த பிக்கப் வண்டியை மோதித் தள்ளியி ருக்கிறது. சம்பவம் நடந்த இடம் சனசந்தடி மிகுந்த ரயில்வே கடவையாகும். ஒரு விடயத்தை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி யிருக்கிறது. இந்த ரயில்வே கடவையில் வீதிக்குக் குறுக்காகப் போடப்படும் படலைகள் (கேற்) எதுவும் போடப்படவில்லை. எச்ச ரிக்கை மணி ஒலிக்கும் ஏற்பாடு மாத்திரமே செய்து வைக்கப்பட்டி ருக்கிறது. இந்த நடைமுறையும் இந்த கோரச்சம்பவத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாமென்றே ஊகிக்க முடிகிறது.
குளிரூட்டி வசதியுள்ள வாகனத்தில் வருபவர்கள் யன்னல் கண்ணாடி களை இறுகப்பூட்டியவாறு பயணம் செய்யும் போது அந்தக் கட வையில் ஒலிக்கின்ற மணி ஓசை கேட்கவா போகிறது? அந்த நேரத்தில் எச்சரிக்கை மின் விளக்குகளும் எரிந்ததற்கான சான்றுகள் இல்லை. இந்த நிலையில் ரயில்வே கடவை பாதுகாப்பற்று இருந்தது தான் காரணமாக இருக்கலாமென்ற அனுமானத்திற்கு எம்மால் வர முடிகிறது.
ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் இந்த ரயில்வே கடவையில் பாதுகாப்பு ஊழியர்கள் நிரந்தரமாக பணிக்கமர்த்தப் பட்டிருந்தார்கள். இப்போது நவீனமும், நாகரீகமும் கூடி விட்டதோ என்னவோ எலக்ரோனிக் முறையில் ஒலி எழுப்புவதும் படலைகள் மூடப்படுவதும் வழக்கமாகிவிட்டது. எந்த முறையாக இருந்தாலும் பாதுகாப்பான அதேநேரம் பலமான படலைகளை வீதிக்கு குறுக்காக இடுவதன் மூலந்தான் வாகனங்கள் செல்வதை முற்றாக தடுக்கக் கூடியதாக இருக்கும். இந்தச் சம்பவம் நமக்கெல்லாம் பெரும் படிப்பினையை ஏற்படுத்தியிருக்கிறதென்பதை மறந்து விடக்கூடாது.
இதனைவிடவும் வாகனச் சாரதிகளின் அலட்சியப் போக்கும் பாதசாரிகளின் எதனையும் சீரியஸ்ஸாக எடுக்காத தன்மையும் விபத்துக்களுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. போக்குவரத்துப் பொலிஸார் போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளைப் பிடிக்கிறார்கள். தண்டனையும் வழங்குகிறார்கள். ஆனால் சாராயமும் கசிப்பும் குடித்து விட்டு வாகனம் ஓட்டும் சாரதிகள் இன்னும் இருக்கிறார்கள். இத்தகையோர் பொலிஸாரின் சோதனையில் இருந்து தப்புவதற்காக பல்வேறு வாசனைத் திரவியங்கள் அடங்கிய பொருட்களை வாயில் போட்டு சுவீங்கம் போல் மென்று கொள்கிறார்கள். இவர்கள் எத்தகைய மாற்று உபாயங்களை பிரயோகித்தாலும் வீதி விபத்துக்களுக்கு இத்தகையோரும் காரண கர்த்தாக்களாக இருக்கிறார்கள்.
சாதாரண பாதசாரிகளும் விபத்துகள் ஏற்படுவதற்கு மூல காரணிகளாக இருக்கிறார்கள். வீதியில் செல்லும் போது எப்படி நடந்து கொள்வது என்பது இன்னும் தெரியாதவர்கள் கூடுதலாக இருக்கிறார்கள். குறிப்பாக கொழும்பு போன்ற நகர்ப்புறங்களுக்கு வருகின்றவர்கள் வீதி ஒழுங்கு தெரியாமல் தடுமாறுவதும் வீதிச் சமிக்ஞைகளை பொருட்படுத்தாமலும் புரிந்து கொள்ளாமலும் செல்லும் போது வாகன விபத்துகளைச் சந்திக்கின்றனர். இதனால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதோடு பலர் நிரந்தர அங்கவீனர்களாக்கப்படுகின்றனர்.
இத்தகைய சம்பவங்கள் தினமும் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. நகர்ப்புறங்களில் எத்தனையோ கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் எத்தனையோ சம்பவங்கள் மிகத்தெளிவாக அம்பலப்படுத்தப்படுகின்றன. என்றாலும் கண் காணிப்புக் கமராக்களில் பதிவாகும் சம்பவங்களையும் படிப்பினை களாகக் கொண்டு பொலிஸார் தங்களது பணிகளை மேலும் துரிதப்படுத்துவதற்கு முன்வரவேண்டும். இத்தகைய விபத்துக்களையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களையும் தவிர்ப்பதற்கு மக்கள் அறிவூட்டப்பட வேண்டும். இதற்காக நாடு முழுவதும் விழிப்புணர்வு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமே ஓரளவு தீர்வைக் காணக்கூடியதாக இருக்கும்.