வியாழக்கிழமை அன்று காலமான-வில்லிசை வேந்தர் சின்னமணி அவர்களின் சத்தியவான் சாவித்திரி வில்லுப்பாட்டின் முழுமையான வீடியோப் பதிவு!

வியாழக்கிழமை அன்று காலமான-வில்லிசை வேந்தர் சின்னமணி அவர்களின் சத்தியவான் சாவித்திரி வில்லுப்பாட்டின் முழுமையான வீடியோப் பதிவு!

வில்லிசைக் கலையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி அக்கலையை எழுச்சி கொள்ளச் செய்தவர் சின்னமணி  அவர்கள் 04-02-2015 புதன்கிழமை அன்று காலமானார்.வில்லிசை என்றால் சின்னமணிதான் என்று அனைத்து நிலையினரும் மனம் விட்டுக் கூறும் அளவிற்கு புகழின் உச்சத்தைத் தொட்டவர்.

1450100_860559533986875_8374782252046639192_n-720x480 (1)

நூற்றுக் கணக்கான வரலாறுகளை அழகுற வில்லிசையாக்கி ஆயிரக்கணக்கான மேடைகள் கண்ட வில்லிசைக் கலையின் முடிசூடா மன்னவன் அவர். ஈழத்துக் கலைவானில் சூரியன் போல் பிரகாசித்தவர்.வில்லிசைக் கலைக்கென்றே தன்னை முழுமையாக அர்ப்பணித்த அவருக்கு நிகர் அவரே தான்.

அவர் பற்றிய முக்கியமான தரவுகள்

பெயர் : க.நா. கணபதிப்பிள்ளை சின்னமணி
பிறப்பு : 30.03.1936
இறப்பு : 04.02.2015
தந்தை பெயர் : கணபதிப்பிள்ளை நாகலிங்கம்
தாய் பெயர் : இராசம்மா நாகலிங்கம்
பிறந்த ஊர் : யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப்பகுதியில் இருக்கும் கலைவளம் நிறைந்த சிற்றூரான மாதனை என்னும் கிராமம். காத்தவராயன் கூத்து, இசைநாடகம், சிற்பம் போன்ற துறைகளில் ஈழத்தில் புகழ் பூத்த கலைஞர்கள் பலரைப் பிரசவித்த ஊர் அது.

கலைத்துறைப் பிரவேசம்

தனது எட்டாவது வயதில் குழந்தைக் காத்தானாக நடித்துப் புகழ் பெற்று, நாடகத்துறையிலும் கல்வியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்வராகவே வளர்ந்து வந்தவர். தமிழ் மொழியில் பெரும் புலமை கொண்டிருந்த தனது தாயிடமும் தந்தையிடமும் தமிழையும் புராண இதிகாச வரலாறுகளையும் குருகுலத்தில் கற்பதைப்போன்று கற்றதுடன் தனது மாமனாரான கீதாஞ்சலி வி.கே.நல்லையா (நாட்டியக் கலைஞர்) அவர்களிடம் நடனத்தையும் இசையையும் கற்றுக் கொண்டார்.

பாடசாலைப் படிப்பைச் செவ்வனே முடித்துக் கொண்ட பின் 1957இல் ஆசிரிய நியமனம் பெற்று இரத்மலானை, கொத்தலாவலபுரம் தமிழ்ப்பாடசாலையில் தமிழ், ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார்.

நாடகத்துறை ஈடுபாடு

சிறு வயதில் இருந்து நாடக நடிகனாக வளர்ச்சி கண்டு வந்த இவர் கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் புகழ்பூத்த நாடக மேதைகளான ரீ,கே,சண்முகம் சகோதரர்களுடன் இணைந்து நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற நாடகங்களில் பங்குகொண்டதுடன் இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

அத்துடன் அக்காலத்தில் கொழும்பில் தங்கியிருந்து நாடகங்களை மேடையேற்றிவந்த திரைப்பட நடிகரும் வில்லிசையாளருமான கலைவணர் என்.எஸ்.கிருஸ்ணனுடன் தங்கியிருந்து நாடக உத்திகளையும் வில்லிசையின் நுட்பங்களையும் கற்றுக்கொண்டார்.

வண்ணை. கலைவாணர் நாடக மன்றத்தின் உருவாக்க உறுப்பினர்களுள் ஒருவரான இவர் இம்மன்றத்தால் பல தடவைகள் மேடையேற்றப்பட்ட திப்புசுல்த்தான், வீரமைந்தன், இன்பக் கனவு போன்ற நாடகங்களில் முக்கிய நடிகராகச் சிறப்புற நடித்துத் தனது நடிப்புத் திறனை அற்புதமாக வெளிப்படுத்தி நாடகத்துறையில் ஆழமாகக் கால்பதித்துக் கொண்டார்.

வில்லிசைத் துறை ஈடுபாடு

இவ்வாறு நாடகத்துறையில் துறைதோய்ந்த நடிகனாக விளங்கிய இவர் அக்காலத்தில் ஈழத்தில் வில்லிசை நிகழ்வுகளை வழங்கிவந்த திருப்பூங்குடி ஆறுமுகம் அவர்களின் நிகழ்வில் நகைச்சுவையாளனாகவும் பக்கப்பாட்டுக்காரனாகவும் உடுக்கிசைக் கலைஞனாகவும் வில்லிசை அரங்கைப் பல ஆண்டுகளாகச் சிறப்பித்து வந்தார்.

தனித்துவமான வில்லிசையாளனாக உருக் கொண்டார்

நடிப்பு, இசை, நடனம், தமிழ், சமயம், போன்ற அனைத்திலும் ஒப்பற்ற திறன் கொண்டவராக விளங்கிய இவர் ஹார்மோனியக் கலைஞர் நல்லூர் சோமசுந்தரம், எஸ்.ரி.அரசு ஆகியோரின் துணையுடனும் குருவாக விளங்கிய திருப்பூங்குடி ஆறுமுகத்தின் ஆசீர்வாதத்துடனும் தனித்துவமான வில்லிசைக் கலைஞனாக 02.02.1968 அன்று மாலை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய முன்றலில் பெருந்திரளான கலைஞர்கள், பொதுமக்கள், ஆர்வலர்கள் முன்னிலையில் கலைவாணர் வில்லிசைக் கழு என்னும் பெயரோடு வில்லிசைக் கலைஞனாக அரங்கேற்றம் கண்டார்.

புகழ் பெற்றது வில்லிசை

பல்துறைத் திறன் கொண்ட இவர் வில்லிசை நிகழ்வின் நாயகனாக அமர்ந்து கதையைச் செல்லும் முறையும் நவரசபாவங்களை முகத்தில் காட்டும் அழகும் கதையில் வருகின்ற பாத்திரமாக மாறி நடிக்கும் திறனும் தமிழை அழகுற உச்சரிக்கும் பாங்கும் பொருளுணர்ந்து பாடல்களைச் சுருதி லயம் பிசகாமல் பாடும் இனிமையும் சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவையும் எவரும் எதிர்பார்க்காத விதத்தில் உதிக்கும் கற்பனையும் இவரது தனித்துவப் பண்புகளாக வில்லிசை நிகழ்வுகளில் பொங்கிப் பிரவகித்த போது மக்கள் தம்மை மறந்து இரசித்தனர். இவரது வில்லிசை மாபெரும் புகழைத் தேடிக் கொண்டது.

மரபு வழியான கலைநிகழ்வுகளே முழுமையாக ஆலயத் திருவிழாக்களில் இடம்பெற்று வந்த அக்காலத்தில் இவரால் தொடங்கப்பட்டுப் புதுமையாக உருவாக்கப்பட்ட வில்லிசையானது பெரும் வரவேற்பைப் பெற்றது. இக்கலைக்கெனத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த இவர் தமிழர்களால் விரும்பப்படும் கதைகள் அனைத்தையும் வில்லிசை வடிவில் உருவாக்கிச் சிறப்புற நிகழ்த்தி வந்தார்.

இராமாயணம், மஹாபாரதம், கந்தபுராணம், பெரியபுராணம், ஐம்பெரும் காப்பியங்கள் போன்றவற்றையும் தமிழ் இலக்கியப் பரப்பில் சிதறிக் கிடக்கின்ற நூறிற்கும் மேற்பட்ட வரலாறுகளையும் வில்லிசையாக்கி தொடர் நிகழ்வுகளாக நிகழ்திச் சாதனை படைத்தவர். இவ்வாறான வரலாறுகளை வில்லிசையாக நிகழ்த்தும்போது கதையில் வருகின்ற அத்தனை பாத்திரங்களாகவும் அப்படியே மாறிவிடும் இயல்புடையவராக இவர் இருப்பதனால் படித்தவர் முதல் பாமரர் வரையான அனைவரும் இவரது வில்லிசையை மெய் மறந்து இரசித்தனர், போற்றினர், புகழ்ந்தனர்.

சென்ற நாடுகள்

ஈழத்தின் பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றது மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், கனடா, சுவிஸ் போன்ற நாடுகளிலும் பல மாதங்கள் தங்கியிருந்து நிகழ்வுகளை வழங்கியவர்

இசைநாடகத் துறை

இவ்வாறு வில்லிசைத்துறையில் சரித்திரம் படைத்த கலைஞராக இருந்த போதிலும் இசைநாடகத் துறையிலும் தன்னிகரற்ற கலைஞராக விளங்கியவர். இசைநுட்பம் நிறைந்த பாடல்களையும் பல வரலாறுகளை எடுத்துரைக்கின்ற நீண்ட வசனங்களையும் கொண்டமைந்த பாத்திரமான இயமனாக நடிப்பதில் தனித்துவமான பாணியை ஏற்படுத்திப் பல இளம் நடிகர்களிற்கு எடுத்துக்காட்டாக நடித்துக் காட்டியவர்.

இயமனாக நடிப்பது எப்படி என்பதற்கு இலக்கணம் வகுத்தவர். மேலும் நட்சத்திரத் தரகர், தோட்டி, சத்தியகீர்த்தி போன்ற பாத்திரங்களிலும் தனித்துவம் பெற்றவர். சுருதி சுத்தமாகக் காத்தவராயன் கூத்தைப் பாடி நடிக்கும் திறன் கொண்ட சிலருள் முதன்மையானவர்.

பெற்ற பட்டங்கள்

பல விதமான பட்டங்களைத் தமிழர்கள் அவரிற்குச் சூட்டி மகிழ்ந்தனர். அவற்றுள் சில
வில்லிசைப் புலவர், கலாவினோதன், முத்தமிழ் மாமணி, வில்லிசை வேந்தன், வில்லிசைச் சக்கரவர்த்தி, வில்லிசைத் திலகம், பல்கலை வேந்தன், முத்தமிழ் வித்தகன், ஜனரஞ்சக நாயகன், வில்லிசைப் பேரொளி, நவரசக் கலைஞன்

நமது தாயகத்தின் தேசியக் கலைஞரான இவரது மறைவு ஈழத்தின் கலைத்துறையில் ஈடுசெய்து கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. ஊரெங்கும் ஒலித்து நம் இதயங்களில் பதிந்த குரல் அமைதியடைந்து விட்டது.

என்றும் அழியாது அவர் புகழ்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux