தமிழை ஆட்சி மொழியாக்கக் கோரி மெரீனா கடற்கரையில் மொழியுரிமை பேரணி!

தமிழை ஆட்சி மொழியாக்கக் கோரி மெரீனா கடற்கரையில் மொழியுரிமை பேரணி!

1965 இல் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த மொழிப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழ் அமைப்பினர் இன்று சென்னை மெரீனா கடற்கரையில் கூடினர்.

26-1422265009-mozhi-urimai-perani-600

தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கண்ணகி சிலையிலிருந்து திருவள்ளுவர் சிலைவரை ஊர்வலமாக சென்று, மொழிப்போர்த் தியாகிகள் படங்களை ஏந்தி, அஞ்சலி செலுத்தினார்கள்.

மொழித் திணிப்பை எதிர்த்தும் தமிழுக்கு மத்திய அரசில் ஆட்சி மொழி அந்தஸ்து வேண்டும் என்று கோரியும் முழக்கம் எழுப்பிய கூட்டியக்கத்தின் உறுப்பினர்கள், 2015 ஐ மொழி உரிமை ஆண்டாகக் கடைப்பிடிக்கப்போவதாக கூறினர். மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை ஆக்கும்வரை தொடர்ந்து போராடுவோம். கல்வி, வணிகம், நீதித்துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வென்றெடுப்போம் என்று பத்திரிகையாளர்களிடம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் கூறினார்.இந்த ஆண்டை மொழி உரிமை ஆண்டாகக் கடைப்பிடித்து பல போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்தவுள்ளோம் என்றும் அவர் கூறினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய வாசக அட்டைகளை ஏந்தி ஊர்வலம் நடந்தபோது பொதுமக்கள் ஆதரவாக நின்று வரவேற்றனர்.

மொழி உரிமையை வலியுறுத்திய முழக்கங்கள் கடற்கரைக்கு வந்தவர்களை ஈர்த்தது. நிகழ்ச்சியில் குழந்தைகளும் மாணவர்களும் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன், தமிழ்த் தேச இதழாசிரியர் தியாகு, தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன், தமிழ்த்தேச மக்கள் கட்சி பொதுச்செயலர் தமிழ்நேயன், தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் செல்வி, மக்கள் இணையம் கட்சியின் பொதுச் செயலர் தாண்டவமூர்த்தி, தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி, தமிழர் பண்பாட்டு நடுவத்தின் தலைவர் ராஜ்குமார் பழனிச்சாமி, தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அதியமான், தமிழர் எழுச்சி்க் கழகத்தின் தலைவர் வேலுமணி, தமிழ்நாடு மாணவர் இணையத்தின் பொறுப்பாளர் தமிழ்நெறியன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி, தமிழர் முன்னணி தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயனன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் பொறுப்பாளர் சீராளன் உள்ளிட்ட பல அமைப்பின் பிரதிநிதிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டார்கள்.

Leave a Reply