வெத்தலைக்கு சுண்ணாம்பு கேட்ட மோகினிப் பேய்(பேய்க்கதை)

அமாவாசை இரவு. திருச்செந்தூர் தியேட்டரில் ரெண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர் இருவரும். அவர்களது ஊர் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி. கொத்தனார் வேலை பார்ப்பவர்கள். ‘வழியில ரெண்டு மூணு இடத்துல முனிப்பாய்ச்சல் உண்டு’ என்று ஊர் பெரியவர்கள் சொல்வது சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்தவனுக்கு திடீரென நினைவு வந்தது. அந்த நேரம் பார்த்து, ஒண்ணாவது மைல் முக்கு பகுதியில் கும்மென்று மல்லிகைப்பூ வாசம் வீசியது. வேகவேகமாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.


பின்னால் உட்கார்ந்திருந்தவன் ஏதோ ஞாபகத்தில் வந்துகொண்டிருந்தான். பளபள பட்டுச்சேலை, தலை நிறைய மல்லிகைப்பூவுடன் ரோட்டோர மரத்தடியில் இளம்பெண் நிற்பதை அவன் பார்த்தான். உள்ளுக்குள் சபலம். “மச்சான் வயித்த கலக்குறாப்ல இருக்கு. நீ போய்ட்டே இரு. வந்திடறேன்” என்றான். ஓட்டியவன் ஏற்கனவே பீதியில் இருந்ததால் வேகத்தை கொஞ்சமும் குறைக்கவில்லை. இவன் குதித்துவிட்டான். மரத்தடிக்கு போனான். பெண் அந்தப் பக்கம் திரும்பி நின்றிருந்தாள். மல்லிகையை வாசம் பிடித்தவன் மெதுவாக அவள் முகத்தை திருப்பினான். கோரைப்பற்கள் வாய்க்கு வெளியே நீட்டியிருந்தன. நாக்கு நீண்டிருந்தது. கொலைவெறிக் கண்கள். ‘ஹா..ஹா’ என்று பெருங்குரலெடுத்து சிரித்தாள். இவனது லப்டப்கள் தாறுமாறாக எகிறின. ‘காப்பாத்துங்க.. பேயி’ என்று அலறியவன், நெஞ்சை பிடித்துக்கொண்டே அதே இடத்தில் சரிந்தான். அவன் பேயடித்து இறந்த தகவல் மறுநாள் ஊரையே பரபரப்பாக்கியது.

பரமன்குறிச்சியை சேர்ந்தவர் வண்டிக்கார மூக்காண்டி. திருச்செந்தூர் ரோட்டில் மாட்டு வண்டியில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் திடீரென இரு மாடுகளும் முரண்டு பிடித்து நின்றன. எவ்வளவு விரட்டியும் நகரவில்லை. யாரோ கொம்பை பிடித்து வளைப்பதுபோல கழுத்தை பலமாக ஆட்டின. மணிச்சத்தமும் பீதியை அதிகரித்தது. துணிச்சல்காரரான மூக்காண்டி இடுப்பை தொட்டுப்பார்த்துக்கொண்டார். சூர்க்கத்தி பத்திரமாக இருந்தது.
‘அண்ணாச்சி.. நில்லுங்க நில்லுங்க’ என்று திடீரென பெண் குரல். மாட்டு வண்டியை மறித்தாற்போல நடுத்தர வயது பெண் நின்றிருந்தாள். “என்னம்மா வேணும்? நடு ராத்திரியில உனக்கு இங்கு என்ன வேல?” என்றார். பெண்ணிடம் இருந்து பதில் இல்லை. “கேக்கிறேன்ல” என்றார் அதட்டலாய். “வெத்தல போடணும். கொஞ்சம் சுண்ணாம்பு இருந்தா குடுத்துட்டு போங்களேன்” என்றாள் பெண்.
‘உஷாரா இரு’ என்றது மூக்காண்டியின் உள்மனசு. ‘பேய்க்கு இரும்பு ஆகாதுவே’ என்று ஊர் பெரியவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. இடுப்பில் செருகி வைத்திருந்த கத்தியை எடுத்தார். அதில் சுண்ணாம்பை தடவி பெண்ணிடம் நீட்டினார். அடுத்த கணம்.. மின்னலாய் மறைந்தது பெண் உருவம்.

அதே ஏரியாவில் உள்ள முந்திரித்தோட்டம் பகுதி. இரவு சாப்பிட்டு முடித்துவிட்டு, பேச்சியம்மாளும் பஞ்சவர்ணமும் நடுவாசலில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து பாய் முடையத் தொடங்கினார்கள். பேச்சு மும்முரத்தில் நேரம் போனதே தெரியவில்லை. நள்ளிரவு ஒரு மணியை எட்டிக் கொண்டிருந்தது. “எக்கா. களைபறிக்க பொழுது விடியறதுக்குள்ள போணும். சீக்கிரம் வந்திருக்கா” என்று சொல்லிவிட்டு படுத்தாள் பஞ்சவர்ணம். பேச்சியம்மாளும் தூங்கச் சென்றாள்.

“பஞ்சவர்ணம். நேரம் ஆகிடிச்சு. வா போலாம்” & சத்தம் கேட்டு எழுந்தாள் பஞ்சவர்ணம். தூக்கம் இன்னும் கலையவில்லை. அவசரத்தில் களைவெட்டியையும் எடுக்காமல் புறப்பட்டாள். ‘பின்னாலயே வா’ என்று சொல்லிவிட்டு பத்தடி தூரம் முன்பு பேச்சியம்மாள் விடுவிடுவென போய்க்கொண்டிருந்தாள். ‘எக்கா. ஏன் இவ்ளோ வேகம்’ என்று கேட்டபடியே ஓட்டமும் நடையுமாக போனாள் பஞ்சவர்ணம். ஊரை தாண்டி முத்தேரிக்கு செல்லும் ஒத்தையடிப்பாதை வந்தது. பஞ்சவர்ணம் முன்பு திடீரென வாட்டசாட்டமாக ஒரு உருவம். ‘நடுராத்திரி எங்க போற? போ வீட்டுக்கு’ என்று சொல்லிவிட்டு மறைந்தது. முன்னால் சென்ற பேச்சியம்மாளை பார்த்தாள்.. அவளையும் காணவில்லை. கண்மண் தெரியாமல் ஓடியவள் வீட்டில் வந்து விழுந்தாள். இரண்டு நாள் காய்ச்சல். பூசாரி வந்து வேப்பிலை அடித்துதான் சரியானது.

‘பேச்சியம்மா உருவத்துல பேய்தான் வந்து பஞ்சவர்ணத்த எழுப்பி அழைச்சிட்டு போச்சு. பெரியகோயில் சாமிதான் வழியில வந்து அவ உசிரை காப்பாற்றிச்சு’ என்று முந்திரித்தோட்டம் பகுதி மக்கள் இப்போதும் சொல்கிறார்கள். ஒண்ணாவது மைல் முக்கு, முந்திரித்தோட்டம் ஒத்தையடிப்பாதை போன்ற இடங்கள் இப்போதும் அப்பகுதியினருக்கு கிலியாகத்தான் இருக்கிறது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux