அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி வருபவரும்-மண் மறவாத மனிதருமாகிய, திரு எஸ்.ராஜலிங்கம்( எஸ்.ஆர்) அவர்கள் அண்மையில் தனது துணைவியாருடனும்,மூத்த மகள் குடும்பத்தினருடனும் அல்லைப்பிட்டிக்குச் சென்று 21 நாட்கள் ஊரில் தங்கியிருந்து விட்டு பிரான்ஸ் திரும்பியிருந்தார்.
அவர் அல்லைப்பிட்டிக்கு போய் திரும்பியதற்கும்-அல்லையூர் இணையத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்-
ஆம் ஒவ்வொரு வருடமும் ஊருக்குச் சென்று திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.அப்படி உல்லாசப்பயணிகளாகச் செல்லும் இவர்களில் பலர் ஊரில் தங்குவதில்லை-வாகனங்களில் வரும் இவர்கள் ஊரைச் சுற்றிப்பார்த்து விட்டு யாழ்ப்பாணத்திற்கோ அல்லது வேறு இடங்களுக்கோ ஒரு நாளில் திரும்பி சென்று விடுகின்றனர்.விதிவிலக்காக ஒரு சிலர் ஊரில் உள்ள தமது உறவினர்களுடன் ஒன்றி விடுகின்றனர்.
பொதுச்சிந்தனையோ அல்லது ஊரில் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமோ இவர்களில் பலருக்கு அறவேயிருப்பதில்லை.
ஆனால் நீண்ட காலத்திற்குப்பின்னர் ஊர் திரும்பிய,திரு எஸ்.ஆர் அவர்கள் -உறவினர்கள்-நண்பர்கள்- ஊரவர்கள் என்று தம்மைப்பார்பதற்கு வந்தவர்களை எந்த வித வேறுபாடுமின்றி உபசரித்து அவர்களுடன் ஊர்க்கதைகள் பல பேசி-அவர்கள் திரும்பும் போது அவர்களின் கரங்களில் சில ஆயிரம் ரூபாக்களைத் திணித்து அன்புடன் வழியனுப்பி வைத்ததாக -உதவி பெற்ற,பலர் எமது இணையத்திற்கு நேரடியாகத் தெரிவித்தனர்.
கருணையுள்ளம் மிக்க ஒருவரால் மட்டுமே-அதிகமான மக்களுக்கு ஒரேயடியாக ஊர்பற்றோடு உதவிடமுடியும்-அத்தோடு திரு எஸ்.ஆர் அவர்கள் ஆலயங்களுக்கும் பெருமளவில் உதவியிருக்கின்றார் என்பதனையும் நாம் அறிந்து கொண்டோம். எனவே தான் அவர் ஊருக்குச் சென்று வந்த செய்தியினை-அவரது அனுமதி பெற்று உங்களோடு பகிர்ந்து கொண்டோம்.ஏனெனில் வரும் காலங்களில் உல்லாசப்பயணிகளாக ஊருக்குச் செல்லும் மக்கள் ஊரில் உள்ள ஏழைகளுக்கு உதவிட வேண்டும் என்ற நோக்கமே இப்பதிவின் காரணமாகும்.