ஒரு மணி நேரம் இதயம் நின்றும் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த தம்பதியர் டேவ் (41) – ஆமி (38). இவர்களது 3-வது குழந்தை கோர் ஆட்டிசன் (ஒன்றே முக்கால் வயது). கொல
ராடோ மாநிலம் டென்வர் நகரில் தங்களது பாரம்பரிய பண்ணை வீட்டுக்கு கணவன் மற்றும் குழந்தைகளுடன் கடந்த ஜூலையில் சென்றிருந்தார் ஆமி.

குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கோர் திடீரென காணாமல் போனான்.

ஆளுக்கொரு பகுதியாக பண்ணை வீட்டை சுற்றி தேடினர். அரை மணி நேரத்துக்கு பிறகு, கேனிசன் ஆற்றில் குழந்தை அசைவற்று கிடப்பதை கண்டுபிடித்தனர். அமெரிக்காவிலேயே மிகவும் குளிர்ந்த பகுதிகளில் அதுவும் ஒன்று.
கேனிசன் ஆற்று நீர் வெப்பநிலை 2 முதல் 8 டிகிரி வரை இருக்கும். சில்லிடும் நீரில் அரை மணி நேரம் கிடந்ததால் குழந்தையின் உடல் விறைத்துப் போயிருந்தது. குழந்தையின் தாத்தா கிர்க் ஒரு டாக்டர். உடனடியாக குழந்தையின் மார்பு பகுதியை பலம்கொண்டு அழுத்தினார்.
வாயில் வாய் வைத்து ஊதினார். ஆனாலும், சுவாசம் திரும்பவில்லை. இதற்கிடையில், அவசர சேவைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். ஹெலிகாப்டர் மூலம் குழந்தை உடனடியாக டென்வர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. 55 நிமிடத்துக்கும் மேலாக இதயத்துடிப்பு இல்லாமல் இருந்த குழந்தை மூளைச்சாவு அடைந்திருக்கலாம் என்று டாக்டர்கள் கருதினர்.
குழந்தை உயிர் பிழைக்கும் வாய்ப்பு 99 சதவீதம் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். அப்போது, குழந்தையின் கையில் லேசாக அசைவு தெரிவதை ஒரு நர்ஸ் பார்த்து சொன்னார். உடனே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வித்தியாசமான முறையில் ‘ஹைபர்னேஷன்’ சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.
குழந்தையின் உடல் வெப்பநிலையை 90 டிகிரி பாரன்ஹீட்டாக குறைத்தனர். 48 மணி நேரம் முடிந்ததும் திடீரென வெப்பநிலையை சகஜநிலைக்கு கொண்டு வந்தனர். கை, கால்களை குழந்தை நன்கு அசைக்க ஆரம்பித்தது.
ஒரு மாத தொடர் கண்காணிப்புக்கு பிறகு, இப்போது வழக்கம்போல விளையாடத் தொடங்கிவிட்டது குழந்தை கோர். ‘‘உடலை உறையவைக்கும் அளவுக்கு குளிர்ந்திருந்த நீரில் விழுந்ததால் வளர்சிதை மாற்றம் அதிகம் நடக்கவில்லை.
இதனால்தான் சுவாசம், இதயத்துடிப்பு மிகமிக குறைவாக இருந்த நிலையிலும் உடலில் உயிர் இருந்துள்ளது. குழந்தைகளுக்கு மட்டுமே இது சாத்தியம். அதேபோல, மேலும் 2 நாட்களுக்கு ஹைபர்னேஷன் நிலையை உருவாக்கி சிகிச்சை அளித்ததால் குழந்தை உயிர் பிழைத்துள்ளது.
மேலும், குழந்தையை கண்டுபிடித்ததும் அதன் வாயில் வாய் வைத்து உறவினர்கள் காற்றை ஊதியது, நுரையீரலை அழுத்தியது ஆகியவையும் உயிர் பிழைக்க முக்கிய காரணம்’’ என்று டாக்டர்கள் கூறினர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux