தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்திற்கு-மண்கும்பான் கடற்கரைப்பகுதியிலிருந்து பல இலட்சம் ரூபாக்கள் செலவில் குழாய்மூலம் குடிநீர் பெறப்பட்டு நீர்த்தொட்டியில் சேகரிக்கப்பட்டு ஆலய தேவைக்கும் பொதுமக்களின் தாகசாந்திக்கும் பயன்படுத்தப்பட்டது. குடிதண்ணீர் சிரமமின்றி ஆலயப்பகுதியில் கிடைத்ததனால் பிள்ளையார் பக்தர்களும் தீவகம் சென்று திரும்பும் மக்களும் பெரிதும் பயனடைந்து வந்தனர்.
சாட்டியிலிருந்து குளாய்மூலமாக பெறப்பட்டு வந்த நல்ல தண்ணீர் திடீரென உவர்நீராக மாறிவிட்டதாக பக்தர்களும் பொது மக்களும் பெருங்கவலை வெளியிட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்தினால் நிலத்தடி நீரூற்று குறைவடைந்து செல்வதே இதற்கான பிரதான காரணமாக பேசப்படுகின்றது.
மண்கும்பான் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் தொடர்ந்து நல்லதண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்கான மாற்று ஏற்பாடு ஒன்றை மேற்கொள்ளப் போவதாக ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.
தீவகத்திற்கு பெரும்பாலும் மண்கும்பான் மண்தான் ( மண்டைதீவு முதல் புங்குடுதீவு வரை )தண்ணீரையும்-கட்டிடத் தேவைக்கான மணலையும் வழங்கி வருகின்றது. இருந்த போதிலும்-எதிர்காலத்தில் இவையிரண்டும் தடைப்பட்டால் தீவகத்தில் குடிதண்ணீருக்கான பெரும் தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போகலாம்.