யாழ்ப்பாணத்தில் ராஜா தியேட்டரில் இன்று படம்…….

இன்றைய ராஜா திரையரங்கு

எனது யாழ்ப்பாணப் பயணத்தில் திருத்தலங்களைத் தரிசிக்கும் நிகழ்ச்சி நிரலின் படி அன்றொரு நாள் லுமாலாக் குதிரையின் மீதேறி நான் சென்றது தியேட்டர் வலம். காங்கேசன் துறை வீதியில் முதலில் சந்தித்தது மனோகரா தியேட்டரை.
அங்கு களவாணி படம் ஓடிக்கொண்டிருந்தது, ஏற்கனவே களவாணியை சிட்னியில் தரிசித்ததால் மனோகராவுக்குள் நுழையாமல் அடுத்ததாக சாந்தித் தியேட்டர் பக்கம் போவோம் என்று ஆஸ்பத்திரி வீதிக்குக் குறுக்கால் போகும் குச்சொழுங்கைக்குள் சைக்கிளை விட்டேன். முன்னர் அந்த மூத்திர நாத்தம் பிடிச்ச ஓடைக்குள் தான் நவா தியேட்டர் இருந்ததாகச் சொல்லுவினம். நவா தியேட்டரை நான் தரிசிக்கும் முன்னரேயே அது போர்ச் சூழலில் செத்து விட்டது. குச்சொழுங்கையின் அரைப்பங்கை நிரப்பிய நாற்றம் பிடித்த குப்பை மேடுகளைக் கடந்தால் அந்தா தெரியுது சாந்தி இல்லையில்லை நாதன்ஸ் இல்லையில்லை செல்லா சினிமா. என்ன குழம்பி விட்டீர்களா, ஒரு காலத்தில் சாந்தி ஆக இருந்து பின்னர் நாதன்ஸ் ஆகி இப்போது இந்தத் தியேட்டர் செல்லா சினிமா.

கருணாஸ் நடித்த அம்பா சமுத்திரம் அம்பானி படம் ஓடிக்கொண்டிருப்பதாக வெளியில் இருந்த கட் அவுட் சொல்லியது. என்ன கொடுமை ஐயா கருணாஸ் ஹீரோவா நடித்த படமெல்லாம் தியேட்டருக்குப் போய்ப் பார்க்கும் அளவுக்கு யாழ்ப்பாணச் சனம் மீது ஒரு கலாச்சார வன்முறை கட்டவிழ்த்து விடுவதைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா என்று மனதுக்குள் வெதும்பினேன். இந்த மனுசன் இதுக்குத் தான் இலங்கைக்கு விடாப்பிடியா வரவேணும் எண்டு கஷ்டப்பட்டவர் போல.

வின்சர் தியேட்டர் பக்கம் ஒரு மினி சினிமா
தற்போதைய வின்சர் தியேட்டர்
ராணி தியேட்டர் சயிக்கிள் பார்க்காக இருந்து இப்ப அதுவும் இல்லாமல் பூட்டிக் கிடக்க, லிடோ இருந்த சுவடே இல்லாமல் கட்டிட வளாகம் தோன்றி மறைக்க வெலிங்டன் தியேட்டர் வெறுங்காணிக்குள் கறள் பிடிச்ச இரும்புச் சாமான்களோடு நிரம்பியிருக்க, வின்சர் தியேட்டர் கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியமாக மாற, சிறீதர் தியேட்டர் ஈ..பி.டி.பி முகாம் ஆகிப் போனது.

அடுத்து எஞ்சிருயிருப்பது ராஜா தியேட்டர் தான். அந்தப்பக்கமாக லுமாலா பாய்ந்தது. “தில்லாலங்கடி” ஓடிக்கொண்டிருந்தது. சரி உள்ளே போய்ப் பார்ப்போமே என்று ராஜாவுக்குள் நுழைந்து சைக்கிள் பார்க்கில் லுமாலாவை ஓரங்கட்டி நிறுத்தினேன்.


ராஜா தியேட்டருக்குள் சுவரில் மாட்டியிருந்த படங்களைக் கமராவால் சுட்டேன்.

“அண்ணை! றிக்கற் எவ்வளவு” – இது நான்
“பல்கனி 200 ரூபா, சுப்பர் பல்கனி 240 ரூபா” என்றார் றிக்கற் விற்பவர். (ஏன் நான் கலரியில் இருக்க மாட்டேனோ?)
“சுப்பர் பல்கனி ஒரு ரிக்கற் தாங்கோ” ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் சுப்பர் பல்கனி என்றால் என்னவென்றே தெரியாமல் றிக்கற் வாங்கியாச்சு.

“மேல போங்கோ அண்ணை”

“டிங்கரிங்க ரிங் ஆ டிங்கரிங்க ரிங்” தில்லாலங்கடி பாட்டைப் பாடிக் கொண்டே இன்னொருபக்கம் படம் பார்க்க வந்த பெண் சிரசுகளைச் சைற் கொண்டே சொல்லுறார் அந்த ரிக்கற் கிழிக்கிற பெடியன்.

பல்கனிக்கும் மேலாக இன்னொரு வாசல் “சுப்பர் பல்கனி”க்கு. எட்டிப்பார்த்தால் சோடி சோடியாய் நாலு சோடி காதலர் குடி கொண்டிருக்கினம். நானோ தன்னந்தனியன் “அடக்கோதாரி இதுக்குப் பெயரா சுப்பர் பல்கனி, நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா” என்று மனதுக்குள் கறுவியவாறே மீண்டும் றிங்க றிங்க றிங் பெடியனிடம் வந்து,
“தம்பி! நான் சுப்பர் பல்கனிக்கு ரிக்கற் எடுத்தனான், ஆனா பல்கனியிலேயே இருந்து கொள்ளுறன்”
“சரியண்ணை” என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் அவன்.

முன்னர் 2006 இல் மெர்குரி பூக்கள் படம் பார்க்க வந்த போது படம் தொடங்கி ஒவ்வொரு 5, 10 நிமிஷத்துக்கு இடைவேளை வரும், பின்னை என்ன அப்போதிருந்த மின்சார நிலைமை அப்படி, ஆனா இந்த முறை அப்படியில்லை ஒரேயொரு இடைவேளை தான். முந்தின தியேட்டர் ஸ்கீரினில் ஒட்டுப் போட்டுப் பிச்சைக்காரனின் சட்டை மாதிரி இருக்கும் இப்ப நல்ல வெண்திரையில்.2006 இல் பார்த்த ராஜா தியேட்டர் இதுதான், ஒருத்தர் ஹாயா காலைத் தூக்கி சீற்றுக்கு மேலை வச்சிருக்கிறார் பாருங்கோ 

பள்ளி விடுமுறை என்பதால் சின்னனுகள் தாய் தேப்பனோட வந்து தில்லாலங்கடியில் கும்மி இருந்தனர். வடிவேலுவுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு ரசிகர் சங்கமே இருக்குப் போல.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே தனியே தன்னந்தனியே படம் பார்த்து முடித்து வெளியே வந்தேன்.

பின்னேரம் மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் போகிறேன். அங்கே நின்ற ஒரு பெடியன்
“அண்ணை என்ன உங்களைக் காலமை தியேட்டர் பக்கம் கண்டது போல இருக்கு”

யாழ்ப்பாணம் மாறவில்லை 😉

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux