“காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்-ஞாலத்தின் மாணப் பெரிது”
என்ற திருக்குறளுக்கு அமைவாக-தான் வாழ்ந்த அல்லைப்பிட்டி மண்ணில் அன்று தன்னை அன்போடு அரவணைத்து பண்போடு நடத்தி பாசத்தைக் காட்டிய அந்தத் தாய்-இன்று முதுமையில் நோயோடும் நொடியோடும் வாழ்வதனை அறிந்து-அவருக்கு உதவிட வேண்டும் என்ற நல் எண்ணத்தோடு எம்மை நாடினார் –
எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவரும்,புலம் பெயர்ந்து ஜரோப்பிய நாடொன்றில் வசித்து வருபவருமாகிய அவர் (தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று பெருந்தன்மையோடு கேட்டுக் கொண்டார்.)
அணில் போல் உதவினோம்
அல்லையூர் இணையத்தின் பிரதான நோக்கமே-அறப்பணியாற்றுவது தான் என்பதனால் -அவரின் வேண்டுகோளை மகிழ்வோடு ஏற்று உடனடியாக அல்லைப்பிட்டியில் வசிக்கும் அந்த அன்னையைத் தேடி கண்டுபிடித்து ஆசிரியை ஒருவரின் உதவியுடன்-அவரின் பராமரிப்பாளர் முன்னிலையில் அவரின் கரங்களில் அந்த பொருட்களையும் பணத்தினையும் ஒப்படைத்தோம்.
இது விளம்பரம் அல்ல…
இது விளம்பரத்திற்காகவோ அல்லது பெருமைக்காகவோ நாம் பதிவு செய்யவில்லை-எம் கிராமத்தில் இன்றும் எத்தனையோ முதியவர்கள் எந்த விதமான ஆதரவும் இல்லாதவர்களாக நோயோடும் நொடியோடும் வாழ்ந்து வருவதாக அறிகின்றோம்.இப்படி அதரவற்றுத் தவிக்கும் முதியவர்களுக்கு உங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்ய முன் வர வண்டும் என்ற பெரும் எதிர்பார்புடனேயே இச் செய்தியினை பதிவு செய்துள்ளோம் என்பதனை பணிவுடன் அறியத் தருகின்றோம்.
“கொடிது கொடிது முதுமையில் தனிமை கொடிது”
உணர்ந்திடுங்கள் உள்ளம் உருகி உதவிடுங்கள்!