அண்மையில் வேலணையில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 14 மில்லியன் ரூபாவில் பொதுச்சந்தையொன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஒன்று நடைபெற்றிருந்தது.
அதன் முதற்கட்டப் பணிகளின் போது கிணறு ஒன்று வெட்டியதாகவும்-அக்கிணற்றிலிருந்தே நல்ல தண்ணீர் ஊற்றெடுப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கிணறு அமைந்துள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் பெரும்பாலும் உவர் நீரே காணப்படுவதாகவும்-அதற்கு விதிவிலக்காக இங்கு நல்ல தண்ணீர் காணப்படுவதனால்- இப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதிக்கு பொதுமக்களுடன் சென்ற வேலணை பிரதேச சபைத் தலைவர் திரு சின்னையா சிவராசா (போல்)அவர்கள் தண்ணீரைப் பரிசோதித்துடன் அதனை பொதுமக்களுடன் சேர்ந்து குடித்துப்பார்த்து நல்ல தண்ணீர் தான் என்பதனை உறுதிப்படுத்தியுள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவகத்தைப் பொறுத்த மட்டில் குடிதண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு எதிர் காலத்தில் ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக அச்சம் வெளியிட்டு வருவதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.